Saturday, February 24, 2007

சிவாஜி படத்துக்கு தெலுங்கில் தடை!

ரஜினியின் சிவாஜி படத்தை தெலுங்கில் வெளியிட பிலிம்சேம்பர் தடை விதித்துள்ளது.ஏவி.எம்.நிறுவனம் தயாரிக்கும் படம் சிவாஜி. ரஜினி நடிக்க ஷங்கர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்தது. டப்பிங் மற்றும் எடிட்டிங் பணி வேகமாக நடக்கிறது. வரும் ஏப்ரல் 12-ம்தேதி திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்நிலையில் சிவாஜி படத்தை தெலுங்கு மொழியில் ஆந்திராவில் வெளியிடுவது தொடர்பாக திருப்பதி பிரசாத், பெல்லங்கொண்டா சுரேஷ் ஆகியோருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. ரஜினி நடிக்கும் படங்களை பெரும்பாலும் தெலுங்கு மொழிக்கு திருப்பதி பிரசாத் வாங்கி வெளியிட்டு வந்தார். மேலும் அவரது தயாரிப்பில் சிரஞ்சீவியை வைத்து ஷங்கர் இயக்க ஒப்புக்கொண்டிருந்த கால்ஷீட்டில்தான் இப்போது ரஜினியின் சிவாஜி படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சுமார் ரூ.13 கோடிக்கு தெலுங்கு உரிமையை பெற திருப்பதி பிரசாத் பேசி வந்தார்.

இதற்கிடையில் பெல்லங்கொண்டா சுரேஷ் அதைவிட ஒரு கோடி அதிகம் தருவதாக கூறி சிவாஜி பட தெலுங்கு உரிமையை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இப்பிரச்னை தொடர்பாக ஆந்திராவில் உள்ள பிலிம்சேம்பரில் புகார் அளித்தார் திருப்பதி பிரசாத். இதுபற்றி முடிவெடுக்க பிலிம்சேம்பரில் திரையுலகைச் சார்ந்த அனைத்து பிரிவினர் பங்குபெற்ற கூட்டம் நேற்று நடந்தது. அதில் இப்பிரச்னை முடியும் வரை சிவாஜி தெலுங்கு உரிமையை யாரும் வாங்கவோ, திரையிடவோ கூடாது என முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

No comments: